ஹாங்காங்கில் 2-ஆம் உலகப்போர் அமெரிக்க குண்டு கண்டுபிடிப்பு.. அலறிய அதிகாரிகள் - 6000 பேர் வெளியேற்றம்

கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
ஹாங்காங்கில் 2-ஆம் உலகப்போர் அமெரிக்க குண்டு கண்டுபிடிப்பு.. அலறிய அதிகாரிகள் - 6000 பேர் வெளியேற்றம்
Published on

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.

இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.

வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com