search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீனாவை நிலைகுலையச் செய்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு
    X

    மீட்பு பணி


    சீனாவை நிலைகுலையச் செய்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

    • நிலநடுக்கம் எதிரொலியாக 50000-க்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
    • சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லூடிங் கவுன்டியில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இதனால், பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி தந்துள்ளனர். நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு சாலை வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டவண்ணம் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    நேற்று மாநில நிலவரப்படி 65 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று மேலும் 9 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

    உயிர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து வித நிவாரண முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்படி சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீனாவின் செஞ்சிலுவை சங்கம், அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூடாரங்கள், நிவாரண தொகுப்புகள், மடிப்பு படுக்கைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பணியாளர் குழு ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதியிலுள்ள 22 ஆயிரம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீர் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியை இணைக்கும் சாலைகளும் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×