என் மலர்
உலகம்

லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு
- விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
- பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது.
விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.






