என் மலர்
உலகம்

வானில் அதிசயம்: ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்
- ரஷியாவில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றின.
- இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றுவது போன்ற காட்சி தென்பட்டது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
விண்வெளியில் ஒரே ஒரு நிலவு மட்டுமே இருக்கும் நிலையில், 4 நிலவுகள் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய நிகழ்வு பாரசெலீன் அல்லது மூன் டாக் என அழைக்கப்படுகிறது.
இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும். நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' போல செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன. இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது என வானிலை அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.






