search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனில் தொடரும் சண்டை
    X
    உக்ரைனில் தொடரும் சண்டை

    உக்ரைனில் 5-வது நாளாக தொடரும் சண்டை: கூடிக்கொண்டே செல்லும் உயிரிழப்பு

    அடுத்த 24 மணி நேரம் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுடன் பேசிய போது அவர் இதை தெரிவித்து உள்ளார்.
    கிவ்:

    நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்தது.

    முக்கிய நகரங்களை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளது. தலைநகர் கிவ்வில் ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உக்ரைன் மறுத்து உள்ளது. அந்த நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.

    இன்று 5-வது நாளாக முக்கிய நகரங்களை குறி வைத்து குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகள் மூலமும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து உக்ரைனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    ரஷிய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, மால்டோவா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அவர்கள் அகதிகளாக சென்று உள்ளனர். இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளனர்.

    போர் தீவிரமடையும் போது மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. மேலும் மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கியும் தங்களை பாதுகாத்து வருகிறார்கள்.

    ரஷிய படையின் ஆக்ரோ‌ஷமான தாக்குதலால் தலைநகர் கிவ் நகரம் விரைவில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையாக போரிட்டனர்.

    இதனால் ரஷிய படைகள் கடும் சவாலை சந்தித்தது. நான்குபுறத்திலும் சுற்றி வளைத்து ரஷிய வீரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தபோரில் 4,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கைதிகளாக பிடித்து உள்ளதாகவும், ரஷியாவின் 706 ராணுவ வாகனங்கள், 146 பீரங்கிகள், 27 விமானங்கள் உக்ரைன் படையினரால் தகர்க்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

    ரஷிய வீரர்கள் கொல்லப்பட்ட தகவலை ஐக்கிய நாட்டு சபையில் ரஷியா மறுத்து இருந்தது. ஆனால் தற்போது தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை அந்த நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

    அதேநேரத்தில் எவ்வளவு வீரர்கள் பலியானார்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை ரஷிய தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “எங்கள் வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உக்ரைன் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பை விட எங்களுக்கு குறைவான இழப்பே ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

    ரஷிய படைகள் தாக்குதலில் உக்ரைன் நாட்டு மக்கள் 352 பேர் பலியானதாக அந்நாடு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “இந்த போரில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர். 116 குழந்தைகள் உள்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

    ரஷிய படைகள் விமான நிலையம் ஒன்றை ஏவுகணை மூலம் தகர்த்ததாகவும், செர்காஸ் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகளை தாக்கியதாகவும் உக்ரைன் ஊடகம் தெரிவித்து உள்ளது.

    இதேபோல அப்பாவி மக்களை குறி வைத்து ரஷிய படைகள் தாக்குவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. இதை ரஷியா மறுத்து உள்ளது. ராணுவ நிலைகள் மீதும், படைகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்துவதாக ரஷிய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும்போது, “உக்ரைனில் 1000 ராணுவ தளங்களை நாங்கள் அழித்துள்ளோம்” என்றார்.

    இதற்கிடையே ரஷியாவில் ராணுவ ஏவுகணை தொகுப்புகளை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவ தலைமை தளபதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட டிரோன் மூலம் இந்த ஏவுகணை தொகுப்பை முற்றிலும் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் பிரதமர்


    அடுத்த 24 மணி நேரம் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுடன் பேசிய போது அவர் இதை தெரிவித்து உள்ளார்.

    போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முதலில் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ரஷியா நேற்று ஏற்றுக்கொண்டது. பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்தது.

    பெலாரசில் பேச்சு நடத்த உக்ரைன் முதலில் மறுத்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரசில் இன்று நடக்கிறது.

    இந்த பேச்சு வார்த்தையில் முன் நிபந்தனைகள் எதுவும் இல்லை என்று ரஷியா ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு நிலவி போர் நிறுத்தம் ஏற்படுமா? என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன.

    இந்த போரில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளித்து வந்தன. இந்தநிலையில் ரஷிய விமானங்கள் தங்களது வான்வழி பகுதியில் பறக்க ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 நாடுகள் தடை விதித்து உள்ளன. ஏற்கனவே ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×