என் மலர்
செய்திகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம்
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுஜன பெருமுனா கட்சி தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து இலங்கையில் 19-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து 20-வது சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2015-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட 19-வதுசட்ட திருத்தத்துக்கு பதிலாக 20-வது திருத்த சட்டத்தை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான 20-வது சட்ட திருத்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
இலங்கை அதிபர் விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால் பாராளுமன்றம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த பின்னரே கலைக்க முடியும்.
பிரதமர், அமைச்சர்களை அதிபர் பதவி நீக்கம் செய்யலாம். அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த யாரும் உத்தரவிட முடியாது. தனி அதிகாரமிக்க தேர்தல் ஆணையம் உள்ளிட்ட 3 ஆணையங்கள் கலைக்கப்படும்.
இந்த ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களை இனி அதிபரே நியமிப்பார். அடிப்படை உரிமை என்று கூறி அதிபருக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்ய முடியாது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம். அமைச்சர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என்ற வரையரை நீக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசிதழில் இடம் பெற்றுள்ள இந்த விவரங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பின்னர் அதன்மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டமாக்கப்படும்.