search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

    தங்கள் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கு அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். இவர்களில் கணிசமான ஆசிரியர்களும் உள்ளனர்.

    சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள். இதேபோல் இந்திய மாணவர்களும் தாய்நாடு திரும்பினார்கள்.

    இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது.

    இது தொடர்பாக சீன கல்வி அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், தாங்கள் படிக்கும் மற்றும் வேலைபார்க்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து முறையான அழைப்பு கடிதம் கிடைக்காத வெளிநாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் அடுத்த தகவல் வரும் வரை தங்கள் கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகத்துக்கோ வரவேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது சீனா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்திய மாணவர்கள் சீனா திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை, பீஜிங் நகரில் உள்ள இந்திய தூதரகம் அந்த நாட்டின் கல்வி அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளது.

    இந்த தகவலை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு மாணவர்கள் திரும்பும் பிரச்சினையில் சீன அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக காத்து இருப்பதாக கூறி இருக்கிறது.
    Next Story
    ×