search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம்மை சந்திக்க வியட்நாம் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X

    கிம்மை சந்திக்க வியட்நாம் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    Next Story
    ×