search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு
    X

    ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு

    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Rajapaksa

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை கடந்த அக்டோபர் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு போதிய எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் என்றும், புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இது அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே ரணில் விக்ரமசிங் கேவை அவர் மீண்டும் பிரதமராக அறிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக்கினார்.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் போதிய உறுப்பினர் இல்லாத ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ளனர். தற்போது அதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.

    அதன் அடிப்படையில் புதிய மந்திரி சபையில் 3 முக்கிய இலாக்காக்களை தன்வசம் வைத்துள்ளார். தற்போது, ராஜபக்சே கட்சியுடன், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாகி இருப்பதால் அதிக உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சி ஆகி விட்டது. எனவே ராஜபக்சேவை எதிர்கட்சி தலைவராக்கி இருப்பதாக சிறிசோன தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. அதில் எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார். #Rajapaksa

    Next Story
    ×