search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஜாரிட்டியை நிரூபித்தாலும் இனி ரனிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- சிறிசேனா திட்டவட்ட அறிவிப்பு
    X

    மெஜாரிட்டியை நிரூபித்தாலும் இனி ரனிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- சிறிசேனா திட்டவட்ட அறிவிப்பு

    பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார். #RanilWickremesinghe #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால் இந்த நியமனத்தை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

    இதற்கிடையே ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் அவரை பிரதமராக ஏற்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதற்காக வருகிற 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    ஆனால் ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களையும், ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள எம்.பி.க்களையும் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

    எதிரணியில் இருந்து ஒன்றிரண்டு பேர் ராஜபக்சே அணிக்கு தாவிவிட்டாலும் கூட இன்னும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு போதிய பலம் வரவில்லை.

    எனவே ஓட்டெடுப்பு நடந்தால் ராஜபக்சே தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.


    இந்த நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டணி எம்.பி.க்களை இழுப்பதற்கு அதிபர் சிறிசேனா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் ராஜபக்சேவை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ஆனாலும் சிறிசேனா தனது முயற்சியை கைவிடவில்லை.

    இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டணி கட்சி பிரதிநிதிகள் அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒருவேளை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் சிறிசேனா கூறியிருக்கிறார்.

    பாராளுமன்ற ஓட்டெடுப்பு நடக்கும்போது தமிழ்தேசிய கூட்டணி சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.

    சிறிசேனா தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எப்படியாவது மெஜாரிட்டியை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்துவேன். எனவே கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். #RanilWickremesinghe #Rajapaksa
    Next Story
    ×