search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியா விமான விபத்து- 9 பேர் உடல்கள் கரை ஒதுங்கின
    X

    இந்தோனேசியா விமான விபத்து- 9 பேர் உடல்கள் கரை ஒதுங்கின

    இந்தோனேசியாவில் லயன் ஏர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேரும் உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

    விபத்து உறுதி செய்யப்பட்டதும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்கள் மிதந்த படி இருந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். விமானத்தின் பயணிகள் இருக்கைகள் ஜாவா கடலோரத்தில் உள்ள பெர்டமினா பகுதியில் கரை ஒதுங்கியது.

    பயணிகள் கைப்பைகள், துணிமணிகள், மொபைல் போன்கள், ஐ.டி. கார்டுகள் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பையும் கரை ஒதுங்கிய பொருட்களில் அடங்கும்.

    விமானம் கடலுக்குள் 98 முதல் 115 அடி (30-35 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கடலுக்குள் மூழ்கி கிடக்கும் விமானம் மற்றும் பயணிகள் உடல்களை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    ரோபோவும் (எந்திர மனிதன்) கடலுக்குள் இறக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று காலை 11 மணி வரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

    அதன் பின்னர் விபத்தில் இறந்த 9 உடல்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.


    இதற்கிடையே, விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஜகார்த்தா சோகார்னோ-கத்தா விமான நிலையத்தில் சோகத்துடன் கூடியுள்ளனர். அவர்கள் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

    விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு என்ஜினீயர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் தென்பகாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு விமானம் பயணிகளை ஏற்றிச் சென்றது.

    நேற்று காலை ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு நகருக்கு புறப்பட்டு சென்ற போது விபத்துக்குள்ளாகி விட்டது என ‘லயன் ஏர்’ தலைமை செயல் அதிகாரி எட்வர்ட் சிரெய்ட் தெரிவித்தார்.

    விபத்தில் பலியான இந்திய விமானி பவ்வி சுனேஜா கடந்த 2 ஆண்டுகளாக மனைவியுடன் ஜகார்த்தாவில் தங்கியிருந்தார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் டெல்லியில் வசிக்கின்றனர்.

    சுனேஜா விமானி வேலையை மிகவும் நேசித்தார். அந்த பணி செய்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என அவரது உறவினர் கபிஷ் காந்தி தெரிவித்தார். #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    Next Story
    ×