search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமிக்கு 48 பேர் பலி
    X

    இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமிக்கு 48 பேர் பலி

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் குறைந்தது 48 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndonesiaEarthquake #TsunamiAttack
    சுலாவேசி:

    இந்தோனேசியா நாடு உலகிலேயே அடிக்கடி நில நடுக்கம் உருவாகும் பகுதியில் அமைந்துள்ளது.

    அதோடு அந்த நாடு எரிமலை வளையத்துக்குள்ளும் இருக்கிறது. அங்கு உயிருள்ள சுமார் 150 எரிமலைகள் இருக்கின்றன.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிகப்பெரிய நாடான இந்தோனேசியா 17 ஆயிரத்து 508 தீவுகளைக் கொண்டது. இந்த தீவுப் பகுதிகளில்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. கடந்த 2004-ம் ஆண்டு சுமத்ரா தீவு அருகில் 9.1 ரிக்டர்அளவு கோலுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி பேரலைகள் தாக்கி சுமார் 2½ லட்சம் பேர் உயிரிழந்தனர்.

    அத்தகைய சக்தி வாய்ந்த நிலநடுக்க தாக்கம் நேற்றும் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவேசி தீவில் நேற்று மாலை 6 மணிக்கு அந்த நிலநடுக்கம் தாக்கியது. டோங்கலா என்ற பகுதியை மையமாகக் கொண்டு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கும் என்று அந்த நாட்டு பேரிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது. இதை கேட்டதும் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.


    இந்த நிலையில் சுலாவேசி தீவின் பலு என்ற பகுதியில் சுனாமி பேரலைகள் தாக்கின. ஊருக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. சுமார் 10 அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தப்படி ஊருக்குள் வந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுனாமி தாக்கியதை அறிந்ததும் பலு பகுதி மக்கள் உயிர் தப்பிக்க மாடிகளுக்கு ஓடி சென்றனர். என்றாலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுனாமி அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 48 பேர் வரை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    நில நடுக்கம் ஏற்பட்ட போது சுலாவேசி மற்றும் கலியா மந்தன் தீவுகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. அதிலும் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    கட்டிட இடிபாடுகள் மற்றும் சுனாமி பேரலைகளில் சிக்கி காயம் அடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த டோவ்லா மாகாணத்தில் சுமார் 6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். #IndonesiaEarthquake #TsunamiAttack 
    Next Story
    ×