search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு - 4 பேர் உயிரிழப்பு
    X

    பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு - 4 பேர் உயிரிழப்பு

    பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த பலத்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Philippines #Landslide
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில், இந்த ஆண்டின் மிக வலுவான புயல் என்று சொல்லப்படக்கூடிய ‘மங்குட்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் இன்னும் மீளவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் தரை மட்டமாகின.



    இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி அந்தப் பிராந்திய போலீஸ் அதிகாரி டிபோல்டு சினாஸ், நிருபர்களிடம் பேசும்போது, “நிலச்சரிவு காரணமாக, சுண்ணாம்பு குவாரி பகுதியில் அமைந்திருந்த 20 முதல் 24 வீடுகள் வரை மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. வீடுகளில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்” என்றார்.

    நாகா நகரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகையும், ஓலமும் தங்களுக்கு கேட்டதாக மீட்பு படையினர் கூறினர்.

    நாகா நகர கவுன்சிலர் கார்மேலிங் குரூஸ், தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நிலச்சரிவில் 50 முதல் 80 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என கருதுகிறோம். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது” என்று கூறினார்.

    நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பால் நாகா நகரம் சோகத்தில் மூழ்கி உள்ளது. #Philippines #Landslide  
    Next Story
    ×