search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை
    X

    ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை

    ‘வழக்கு எண் 4000’ என குறிப்பிடப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் போலீசார் இன்று பத்தாவது முறையாக விசாரணை நடத்தினர்.
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.

    ’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Netanyahucorruption #Netanyahuquestioned
    Next Story
    ×