search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்
    X

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்

    அணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் இன்றும் நாளையும் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #KimJongUn #XiJinping #SingaporeSummit
    பியோங்யங் :

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இரண்டு நாள் பயணமாக இன்று சீனா செல்ல உள்ளதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்குவா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கிம் ஜாங் அன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற உள்ளதை தென்கொரிய அரசும் இன்று உறுதி செய்துள்ளது.

    கிம் ஜாங் அன் வடகொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த மார்ச் மாதம் சீனா சென்றார். அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்த அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே, பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வந்த காரணத்தினால் கடந்த 18 மாதங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவி வந்தது. ஒருவழியாக தென்கொரியாவின் முயற்சியினால் உலகின் இரு துருவங்களாக கருதப்பட்ட கிம் ஜாங் அன்-னும் டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதித்தனர்.

    உலகமே உற்று நோக்கிய வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு, சிங்கப்பூரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.

    இந்நிலையில், அமெரிக்காவுடன் வட கொரியா செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்து இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் வடகொரிய மற்றும் சீன தலைவர்களின் சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KimJongUn #XiJinping #SingaporeSummit
    Next Story
    ×