search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம்மை வரவேற்கும் சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன்
    X
    கிம்மை வரவேற்கும் சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன்

    அமைதி பேச்சுவார்த்தை - வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் வந்தார்

    அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

    சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரள்கின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. 

    சந்திப்பு நடைபெறும் பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    வெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் இருந்து இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்துள்ளார்.

    சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் அன்-ஐ அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    இதேபோல், கனடா நாட்டின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இன்னும், சில மணி நேரத்தில் அவர் இங்கு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, கிம் ஜாங் அன்-னுடனான சந்திப்பை ஒருவேளைக்கான மருந்து என்று குறிப்பிட்ட டிரம்ப், ‘முதல் பேச்சிலேயே அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். பின்னர், இதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன். சமரசம் ஏற்படும் சூழல் உருவானால் கிம் ஜாங் அன்-னை பிறகு வாஷிங்டனுக்கு அழைத்துப் பேசவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.  #Singaporesummit #KimJongUn #DonaldTrump #TrumpKimSummit
    Next Story
    ×