search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டில் இந்தியர் வெல்வாரா?
    X

    சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டில் இந்தியர் வெல்வாரா?

    துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் ஒப்புவித்தல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிசு வெல்லும் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறான்.
    துபாய்:

    துபாயில் புனித குர்ஆன் மனனம் மற்றும் ஓதுதலுக்கான 22ஆவது ஆண்டு சர்வதேசப் போட்டி துபாயில்  நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டாலும், இந்திய நாட்டின் சார்பாக பங்குபெறுபவரை ஆவலோடு இந்திய சமூகம் எதிர்நோக்கியது. மற்ற நாட்களை விட நேற்று அரங்கம் முழுவதுமாக நிறைந்திருந்தது. காரணம் இந்தியாவைச் சேர்ந்தவர் பங்குபெறும் இரவு என்று மக்கள் அறிந்திருந்தனர்.

    நூற்றி நான்கு பங்கேற்பாளர்களில் இதுவரை நாற்பத்தியொன்பது பங்கேற்பாளர்கள் இறுதிப் போட்டியில் பொதுமக்களின் முன்னிலையில் பங்கேற்றனர். நேற்று இரவு நடந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 15 வயதே நிரம்பிய ரோஷன் அஹ்மத் ஷம்சுதீன் முலன்கண்டி, நடுவர்கள் எந்த இடத்திலிருந்து குர்ஆனை வாசிக்கச் சொன்னார்களோ, அதைச் சரியாகப் புரிந்து கொண்டு பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவரும் வகையில் மிகவும் அழகான குரலில் மனனம் செய்திருந்ததை நினைவிலிருந்து ஓதினார்.

    தன்னுடைய பதிமூன்றாம் வயதிலிருந்து திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து, சமீபத்தில் தான் மனனம் செய்து முடித்திருக்கிறார். தனது பெற்றோரும் ஆசிரியரும் தந்த ஊக்கத்தினால் தன்னால் இலகுவாகக் குர்ஆனை மனனம் செய்ய முடிந்தது என்றவர், தான் ஒரு மார்க்க அறிஞராக இருந்து மற்றவர்களுக்குக் குர்ஆனையும் இஸ்லாமையும் போதிப்பதே தன்னுடைய எதிர்காலக் குறிக்கோள் என்றார்.


    பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ரோஷன் இந்த துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் விருதில் “முதல் பரிசு வென்று வீடு திரும்புவதை எதிர்நோக்குகிறேன்” என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார்.

    இவர் இப்போட்டியில் வெற்றி பெறுவாரா? நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரா? என்று இன்னும் சில தினங்களில் இப்போட்டியின் முடிவில் தெரிந்துவிடும். #HolyQuranAward #MemorizeHolyQuran

    -ஜெஸிலா பானு, துபாய்
    Next Story
    ×