search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அதிபருடன் வடகொரியா அதிபர் ஆலோசனை - அமெரிக்கா வரவேற்பு
    X

    சீன அதிபருடன் வடகொரியா அதிபர் ஆலோசனை - அமெரிக்கா வரவேற்பு

    திடீர் விஜயமாக நேற்று சீனா சென்ற வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீன அதிபருடன் நடத்திய ஆலோசனை சமாதான பேச்சுவார்த்தை முயற்சியில் அமெரிக்காவுக்கு கிடைத்த முன்னேற்றமாக கருதப்படுகிறது.
    வாஷிங்டன்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதித்தது.

    இதேபோல், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார் என செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீனாவுக்கு நேற்று ரகசிய பயணம் மேற்கொண்டார். சீன அதிபர் சி ஜின்பிங்-ஐ சந்தித்து பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார். அணு ஆயுதங்களை குறைத்துகொள்ள சீன அதிபரிடம் சி ஜின்பிங் உறுதி அளித்ததாக தெரிகிறது.

    இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது.

    இந்த சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்களது நேசநாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறோம். வடகொரியா மற்றும் சீன அதிபர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியது வடகொரியாவுடன் நாங்கள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகவே கருத வேண்டியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியா மற்றும் சீன அதிபர்கள் சந்திப்புக்கு ரஷியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா - வடகொரியா இடையே இணக்கமான சந்திப்பு நடப்பதற்கு இந்த ஆலோசனை உதவிகரமாக அமைந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என ரஷியா குறிப்பிட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×