search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஆயுதங்களை வைத்து எங்களை கட்டுப்படுத்த முடியாது: இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை
    X

    அமெரிக்க ஆயுதங்களை வைத்து எங்களை கட்டுப்படுத்த முடியாது: இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை

    அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் அதிநவீன ஆயுதங்களை வைத்து எங்களை இந்தியா கட்டுப்படுத்த முடியாது என இந்தியாவை சீனா மறைமுகமாக எச்சரித்துள்ளது.
    வாஷிங்டன்:

    தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, இத்தகைய உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்குமாறு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேட்டுக் கொண்டார். அதம்படி, ஆயுதங்கள் இல்லாத 22 கார்டியன் ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அரசு சம்மதித்தது.

    இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களுடன் கூடிய சி அவெஞ்சர் ரக ஆளில்லா உளவு விமானங்களை வாங்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது. சுமார் 800 கோடி டாலர் செலவில் இவ்வகையிலான 100 விமானங்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உயரதிகாரி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஆயுதங்கள் வாங்கவும் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


    இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்றும், எல்லை பகுதிகளை கண்காணிக்க நவீன சாதனங்கள் வாங்கப்படும் என்றும் கூறினார்.

    ராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆயுதங்களுக்கு பதிலாக நவீன ஆயுதங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 7 லட்சம் துப்பாக்கிகள், 44 ஆயிரம் எடை குறைந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 44 ஆயிரத்து 600 சிறிய ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அந்த வட்டாரங்கள், முதலில் 10 ஆயிரம் எடை குறைந்த துப்பாக்கிகள் வாங்கப்படும் என்றும் தெரிவித்தன. இந்த ஆயுதங்கள் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்காவுக்கான சீனத் தூதர் குய் டியான்காய் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை விற்பதனால் எந்த நோக்கமும் நிறைவேறப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் இந்தியா பலமாக காலூன்ற துடிப்பதாக சீனா கருதிவரும் நிலையில் சீனாவை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    நிரந்தரத்தன்மை, வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை தொடருவதில் சீனா எப்போதுமே தயாராக உள்ளது. கடந்த காலத்தில் இந்தியா-சீனா இடையிலான உறவுகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×