search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்பூஷண் ஜாதவை, மற்ற கைதிகளுடன் சம நிலையில் வைத்து பார்க்க முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்
    X

    குல்பூஷண் ஜாதவை, மற்ற கைதிகளுடன் சம நிலையில் வைத்து பார்க்க முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

    தூதரக ரீதியில் அணுகும் விவகாரத்தில், ஜாதவை மற்ற கைதிகளுடன் சம நிலையில் வைத்து பார்க்க முடியாது என பாகிஸ்தான் திட்டவட்டமாக உணர்த்தி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    தூதரக ரீதியில் அணுகும் விவகாரத்தில், ஜாதவை மற்ற கைதிகளுடன் சம நிலையில் வைத்து பார்க்க முடியாது என பாகிஸ்தான் திட்டவட்டமாக உணர்த்தி உள்ளது.

    இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 47). இவர், கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். இவர், தங்கள் நாட்டில் வேவு பார்ப்பதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ராணுவ கோர்ட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    அந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையீடு செய்துள்ளது. இதையடுத்து ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சர்வதேச கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.

    வியன்னா உடன்படிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் 1977-ம் ஆண்டு முதல், கையெழுத்திட்ட நாடுகளாக திகழ்கின்றன. அப்படி இருக்கும்போது, குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்திருக்க வேண்டும். அந்த அனுமதி தரப்படவில்லை.

    அது மட்டுமின்றி, இந்தியாவும், பாகிஸ்தானும் 2008-ம் ஆண்டு, மே மாதம் 21-ந் தேதி தூதரக அணுகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படியும் ஜாதவை சந்தித்து பேசுவதற்கு இந்திய தூதரகத்துக்கு அனுமதி தரப்படவில்லை.

    ஜாதவை தூதரக ரீதியில் அணுகுவதற்கான வாய்ப்பு விரைந்து தரப்பட வேண்டும் என்று இந்தியா சமீபத்தில் கூட வலியுறுத்தியது.

    இந்த நிலையில், மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்களின் பட்டியலை அந்த நாடு, இந்திய தூதரகத்திடம் வழங்கியது. இதேபோன்று இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் பட்டியலை அந்த நாட்டின் தூதரகத்திடம் இந்தியா வழங்கியது.

    இந்த நிலையில் ஜாதவ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

    ஜாதவ் இந்திய கடற்படையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதிகாரி. அவர் வேவு பார்ப்பதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், அழிவு ஏற்படுத்தும் செயல்களை செய்வதற்ககும் ‘ரா’ உளவு அமைப்பினால் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஆவார். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சொத்துகள் சேதம் ஏற்பட்டுள்ளன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மற்ற சிவிலியன்கள், மீனவர்களுடன் சம நிலையில் வைத்து ஜாதவை இந்தியா பார்க்க முயற்சிக்கிறது. இது தர்க்க பரிகாரம் ஆகும்.

    இரு தரப்பு தூதரக ரீதியிலான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் எழுத்தாலும், செயலாலும் அமல்படுத்தி உள்ளது. மனிதாபிமான வழக்குகள், அரசியலில் பிணைக்கப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா இந்த பிரச்சினையை பொறுத்தமட்டில், வாயால் சொல்லிக்கொண்டிருப்பதைவிட செயலில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தங்கள் சிறைத்தண்டனையை நிறைவு செய்த இந்தியர்கள் 5 பேர் அந்த நாட்டுக்கு கடந்த 22-ந் தேதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

    ஆனால், தண்டனைக்காலம் முடிந்தும் 20 பாகிஸ்தானியர் இந்திய சிறைகளில் உள்ளனர். அவர்கள் இன்னும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. 107 பாகிஸ்தானிய மீனவர்களையும், 85 மற்ற சிவிலியன் கைதிகளையும் தூதரக ரீதியில் அணுகுவதற்கு விண்ணப்பித்து நிலுவையில் தான் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் இந்த அறிக்கை, ஜாதவை பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், பிற சிவிலியன் கைதிகளுடன் சம நிலையில் வைத்து பார்த்து தூதரக ரீதியில் அணுகுவது தர்க்க பரிகாரம் என்று சொல்லி இருப்பது, அப்படி இந்தியா அணுக முடியாது என்று அந்த நாடு திட்டவட்டமாக உணர்த்துவதாக அமைந்துள்ளது. 
    Next Story
    ×