search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆங்கில கால்வாயில் கப்பல்கள் மோதல்: இந்திய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
    X

    ஆங்கில கால்வாயில் கப்பல்கள் மோதல்: இந்திய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

    பிரான்ஸ்-பிரிட்டனுக்கு இடையே உள்ள ஆங்கில கால்வாயில் எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதிக்கொண்ட விபத்தில், கப்பல்களில் இருந்த இந்திய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
    லண்டன்:

    பிரிட்டனையும் பிரான்சையும் இணைக்கும் முக்கிய கால்வாயாக ஆங்கில கால்வாய் உள்ளது. இங்கு கால்வாய் வழியாக கவுதமாலா நோக்கி ஒரு சீபிரெண்டியர் எண்ணெய் கப்பல், 38 ஆயிரம் டன் பெட்ரோலுடன் சென்றுகொண்டிருந்தது. நைஜீரியாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி ஹூவாயன் எண்டீவர் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலும் அதே பாதையில் பயணித்தது.

    இந்த இரு கப்பல்களும் டோவர் துறைமுக நகரம் அருகே இன்று அதிகாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு கப்பல்களும் சேதம் அடைந்தன.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், டோவர் மற்றும் ராம்ஸ்கேட் பகுதியில் இருந்து பிரிட்டன் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஹூவாயன் எண்டீவர் கப்பலானது, இரண்டு கப்பல் பாதைகளுக்கு நடுவே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. சீபிரண்டியர் கப்பலை இழுப்பதற்காக பிரான்சில் இருந்து இழுவை கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளது.

    கப்பல்களில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த 49 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாகவும் பிரிட்டன் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

    விபத்தில் கப்பல்கள் சேதம் அடைந்தபோதும், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, நீர் மாசுபட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×