search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    புதுவசந்தம் தரும் புத்தாண்டே வருக...
    X
    புதுவசந்தம் தரும் புத்தாண்டே வருக...

    புதுவசந்தம் தரும் புத்தாண்டே வருக...

    புதிய ஆண்டு வருவது புது உற்சாகம் தான். இந்த 2022-ம் ஆண்டு புதுவசந்தம் தரும் புத்தாண்டாக அமைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் நம்பிக்கையோட புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
    உலகம் முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்படும் திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மட்டும் தான் மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் மனப்பூர்வமாக மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கிறோம். நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில் தான் உலகிலேயே முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிசம்பர் 31-ந் தேதி மாலை 4:30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்துவிடுமாம். அதற்கு அடுத்து தான் ஆஸ்திரேலியாவில் மாலை, 6:30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

    ஆங்கிலப் புத்தாண்டை பொறுத்தவரை, பட்டாசுகளை வெடித்தும், வாண வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும், பூக்களை வழங்கியும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நினைவில் நிறுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில் தற்போது, ஆண்டு முடிவில் எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கையோடு, 2022 ஆங்கில புத்தாண்டு வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டின்போது, பொதுமக்கள் நகரின் மையப்பகுதியில் கூடி, கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி புத்தாண்டை வரவேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தமிழக மக்கள் புதிய ஆண்டில் கொரோனா நீங்கி, எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாட்டம் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர்.

    புத்தாண்டையொட்டி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கவும், புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை வழங்கவும் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலங்களில் இரவு வழிபாட்டுக்கு தடை இல்லை என்பதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. பலர் புதிய ஆடைகள் எடுத்து, புத்தாண்டை கொண்டாட தயாராகினர்.

    ஆங்கிலப் புத்தாண்டு எளிமையாக கொண்டாடப்படுவதிலும் பல்வேறு நன்மைகள் உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். விரைவாக கொரோனா குறைந்து சுகாதார மேம்பாடு ஏற்படும் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. எனவே இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இதுவரை, நமக்கு பல்வேறு அனுபவங்களை தந்த 2021-ம் ஆண்டை பணிவுடன் வழியனுப்பி வைப்போம். புதியதாக வரும் 2022-ம் ஆண்டை புன்னகையுடன் வரவேற்போம்.

    புதிய ஆண்டை நம்பிக்கையோடும், அன்போடும், புரிதலோடும்... புன்னகையோடும், சமாதானத்தோடும் வரவேற்போம். இந்த புதிய ஆண்டில் நமக்கு நன்மைகளையும், வெற்றிகளையும் இறைவன் பரிசளிப்பார். அனைவரின் வீடுகளிலும் புதிய வசந்தம் உதிக்கட்டும்.

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    Next Story
    ×