என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    X

    ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடக்கிறது.

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.

    இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக வன விலங்குகளை பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டு மாடு, குதிரை, முயல், முதலை, குரங்கு உள்பட வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்ட மலர் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், பக்கோடா பாயிண்ட், லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த கோடை விழாவையொட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    கோடை விழாவையொட்டி சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. அதாவது ஏற்காட்டுக்கு செல்லும் போது வாகனங்கள் கோரிமேடு-அடிவாரம் வழியாகவும், அங்கிருந்து கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் வழியாகவும் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

    Next Story
    ×