என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
    X

    வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

    • மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் டேம் அருகே இடதுகரை குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி வனத்தையொட்டி உள்ளது.

    இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை இடதுகரை குடியிருப்புக்குள் புகுந்தது.

    குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த யானை, அங்குள்ள ஜோசப் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மேரி (வயது77) என்பவர் எழுந்தார். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர், அங்கிருந்து ஓட முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவருடன் தங்கியிருந்த தெய்வானை(75) என்பவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனசரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.

    Next Story
    ×