என் மலர்
தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சிகளில் எங்கள் பெயர்கள் இடம் பெறுவதில்லை- அமைச்சர் முன்னிலையில் ஷா நவாஸ் வேதனை

- இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்று கேள்விகள் வருகிறது.
- எங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் சொல்லவில்லை.
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர், பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் இடம் பெறவில்லை.
எங்கோ ஒரு மூலையில் ஒரு அதிகாரிகள் செய்யக்கூடிய சிறு தவறு எங்கே போய் முடிகிறது என்று பார்க்க வேண்டும்.
அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் எப்படி சித்தரிக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இந்த கூட்டணியை எப்படியாவது உடைத்து விட முடியாதா? ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி விட முடியாதா? என்று வெளியே இருக்கும் சக்திகள் கண்ணும் கருத்துமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இங்கே யாரோ ஒரு அதிகாரி செய்யும் பிழை திட்டமிட்டு இந்த அரசே இப்படி செய்கிறது என்கிற ஒரு தோற்றத்தை கொடுத்து விடும்.
இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? என்று கேள்விகள் வருகிறது.
தேவையில்லாமல் அரசுக்கும் நம்முடைய நிர்வாகத்திற்கும் ஒரு நெருக்கடியை அதிகாரிகள் செய்யும் தவறால் ஏற்பட்டு விடுகிறது.
சட்டமன்ற உறுப்பினரின் பெயர் என்பது மக்கள் பிரதிநிதியின் பெயர். ஏதோ எங்கள் பெயர் வரவேண்டும் என்பதற்காக நாங்கள் இதை சொல்லவில்லை.
பேனர் வைப்பதால் எங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைத்து விடப்போவதில்லை. அப்படி ஒரு புகழ் வெளிச்சத்திற்கான தேவையும் எங்களுக்கு தேவை இல்லை.
எங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் சொல்லவில்லை. அதற்கு பின்னால் இருக்கக்கூடிய சுயமரியாதை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது அரசுக்கு இழுக்கை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய, அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய செயலை ஏதோ ஒரு மூலையில் இருந்து செய்துவிட்டு போகிறீர்கள்.
அது தேவையில்லாமல் வேறு வேறு வகையில் எதிரொலிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு, இனிமேல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தால் நெறிமுறை பின்பற்றுங்கள்.
இனிமேல் இதுபோல் தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.