என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் இன்று சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ
    X

    மதுரையில் இன்று சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ

    • நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார்.
    • கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

    மதுரை:

    திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.

    அப்போது வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விஜய் அரசியலில் சாதித்து விடலாம் என மணல் கோட்டை கட்டுகிறார். ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எத்தனை தொகுதியில் போட்டி என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

    துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தனது 82 வயதில் நடைபயணத்தை அறிவித்தார். இதற்கு டாக்டர்கள் மறுத்தபோதிலும் அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் போது அவர் சிரமப்பட்டார். ஆனாலும் அவரின் சுயநலத்திற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. வைகோவின் தியாகத்தை கொச்சைபடுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல என்றார்.

    தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். மாட்டுத் தாவணியில் அவருக்கு கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண் டார்.

    இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார். அதனை தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    Next Story
    ×