என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு - விமான நிலையத்தில் திரண்ட தொண்டர்கள்
- விஜய் வாழ்க, விஜய் வாழ்க என கோஷமிட்டனர்.
- விஜயின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
த.வெ.க தலைவர் விஜய் கோவைக்கு வரும் தகவலை அறிந்ததும் இன்று காலை முதலே த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கோவை விமான நிலையத்தில் திரண்டனர். அவர்கள் கைகளில் த.வெ.க கொடி வைத்திருந்தனர். சிலர் விஜயின் உருவம் பொறித்த டிசர்ட் உள்ளிட்டவற்றையும் அணிந்து வந்திருந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் அவருக்குதொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வாழ்க, விஜய் வாழ்க என கோஷமிட்டனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி வந்தார். பின்னர் விஜய் காரில் ஏறி ஈரோட்டுக்கு புறப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வரையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
அவருக்கு த.வெ.க கொடிகளை காண்பித்தும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடியே காரில் பயணித்தார். ஆர்வமிகுதியில் தொண்டர்கள் பலர் அவரை பின்தொடர்ந்து ஓடியும், மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.
விஜயின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக ஈரோட்டில் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கோவை விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் விஜயை வரவேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்திருந்ததை காண முடிந்தது.






