என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சியில் விஜய் பேசும் இடத்திற்கான அனுமதி கேட்டு மீண்டும் மனு அளிக்கும் த.வெ.க. நிர்வாகிகள்
    X

    திருச்சியில் விஜய் பேசும் இடத்திற்கான அனுமதி கேட்டு மீண்டும் மனு அளிக்கும் த.வெ.க. நிர்வாகிகள்

    • 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
    • ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

    திருச்சி:

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

    இதை தொடர்ந்து மக்களை நேரடியாக சந்திக்கும் அவரது பிரசார சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து வருகிற 13-ந்தேதி தொடங்கி அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி வருகை தந்தார். பின்னர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலைய ரவுண்டானா, மேலபுதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய இடங்கள் வழியாக ரோடு ஷோ செல்வதற்கும், சத்திரம் பஸ் நிலையத்தில் சிறப்புரையாற்றுவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

    ஆனால் இதற்கு போலீஸ் தரப்பில் திருச்சி மாநகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என அனுமதிக்கப்பட்ட 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று விஜய் பேசுவதற்கான இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு திருச்சி வருகின்றனர். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து திருத்தப்பட்ட மனுவை அளிக்க உள்ளனர்.

    Next Story
    ×