என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம்- தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்று மக்கள் கொண்டாட்டம்
- டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
- நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளிமலையாண்டி கோவில் அருகே போராட்டம் நடத்திய மக்கள், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.






