என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானல் பிரதான சாலையில் நீண்ட வரிசையில் இன்று அணிவகுத்து நின்ற வாகனங்கள்
தொடர் விடுமுறை, புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 1 வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் உறை பனி நிலவி வருகிறது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.
மலையடிவாரப் பகுதியான காமக்காபட்டியில் இ-பாஸ் சோதனை பின்பற்றப்படும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், செவன்ரோடு, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் 2 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லாத நிலையில் மாற்று நடவடிக்கைகளை கையாண்டும் முடியாத நிலை ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மலை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தங்களது டிரிப்பை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு வரை இங்கேயே தங்கி புத்தாண்டை கொண்டாட விடுதிகளில் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளன. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, குணா குகை, மோயர் பாயிண்ட் பில்லர் ராக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களை அவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ஏரியில் நீரூற்றின் அருகே பன்னீர் தெளிப்பது போன்ற உணர்வை அனுபவித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். காலையில் கடும் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல சற்று இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை உற்சாகமாக ரசித்து வருகின்றனர்.






