என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமுன்வடிவு இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 6-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக கூறி உரையாற்றாமல் அவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமுன்வடிவு இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.






