என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் பரபரப்பு
    X

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் பரபரப்பு

    • திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
    • இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நாளை (டிசம்பர் 3) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.

    நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்

    அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதம் முன்வைத்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

    இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த தீர்ப்பு கிடைத்தவுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×