என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்
- வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
- பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் .
இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது . பின்னர் பல்லக்கில் சாமி , மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






