என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊழல் மலிந்த ஒரே அரசு தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
    X

    ஊழல் மலிந்த ஒரே அரசு தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

    • ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்.
    • உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைசருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    உங்களது எழுச்சியை பார்க்கும்போது அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு குழு போடுவார். அதோடு அந்த திட்டத்தை கைவிட்டு விடுவார். இந்த அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக மாறிவிட்டது.

    முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஏதாவது திட்டம் இந்த தொகுதிக்கு வந்ததா? அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை முடக்கியது தான் அவருடைய சாதனையாகும். ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். கொள்ளையடிப்பதற்கு மட்டுமே திட்டங்களை கொண்டு வருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதன் மூலம் வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளையடித்தது தான் தி.மு.க. அரசு.

    இந்த ஊழல் அரசாங்கம் தொடர வேண்டுமா? இது மட்டுமல்ல ஊழல் இல்லாத துறையே இல்லை. இப்படி ஊழல் மலிந்த ஒரே அரசு தி.முக. அரசு. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் தேர்தல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாகும். அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா காணும் முதலமைச்சர் தான் ஸ்டாலின்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மயிலம் தொகுதியில் சிப்காட்டில் காய்கனி பதப்படுத்தும் பூங்கா 1000 கோடி ரூபாயில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அந்த பூங்கா அமைந்து இருந்தால் பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும் இந்த ஆட்சியில் பறிபோய் விட்டது.

    மரக்காணத்தில் 1500 கோடி ரூபாயில் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். ஆனால் அந்த திட்டத்தையும் இந்த அரசு ரத்து செய்து விட்டது. இப்படிபட்ட மக்கள் விரோத அரசு இருக்க வேண்டுமா? மக்களுக்கு குடிநீர் வாங்குவதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார்.

    ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தோம். அதை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். ஏன் இந்த ஏழை மாணவர்கள் படிக்கக்கூடாதா? அவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாகும்.

    இந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக வருவதற்கு எங்களது அரசு துணை நிற்கும். 2026-ல் மாற்றம் வரும். மக்களுக்கு ஏற்றம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக கேரளா செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. செஞ்சி ஆற்றுப்பாலம் அருகில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய இரண்டு சக்கர வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

    Next Story
    ×