என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் - ஐகோர்ட்டில் மனைவி புகார்
- வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
- வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று காலை 11.30 மணியளவில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதையொட்டி வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாசர்பாடி வீட்டிலிருந்து முல்லை நகர் மயானம் வரையில் நாகேந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழியிலும் இன்று மாலையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நாகேந்திரனின் மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ஆகியோர் சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் இன்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த ஐகோர்ட்டு, அதற்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிவித்தது. இருப்பினும் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்தார்.






