என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரியில் 'திடீர்' கடல் சீற்றம்- ராட்சத அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சம்
- இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது.
- ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று காலை "திடீர்" என்று பயங்கர கடல் சீற்றம் ஏற்ப ட்டது.
இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு சென்றன.
மேலும் அவை கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அவசர அவசரமாக கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றனர். ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி கிடந்தது. சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.






