என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அஜித்குமார் மரண வழக்கில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது - ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
    X

    அஜித்குமார் மரண வழக்கில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது - ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

    • சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
    • இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரி தனது விசாரணையை தொடங்க வேண்டும். இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×