என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்- மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தம்
- 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
- பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






