என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட்- ஆசிரியர்கள் புது முயற்சி
- மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கில புலமைக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
மாணவர்கள் வருகை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கீழுர் என்ற பகுதி உள்ளது. இங்கு கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பள்ளி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது என நினைத்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்துவதாக உறுதி அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்தால் பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த மாணவரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
மேலும் 5-ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
6-ம் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம், 7-ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரம், 8-ம் வகுப்பு சேர்ந்தால் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பில் சேர்வோருக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
இதே பள்ளியில் பயிலும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்து செல்லும் போது அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 செட் சீருடை, டிரக் சூட்-1 செட், ஸ்கூல் பேக், காலணி, நோட்டு புத்தகங்கள், மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா, வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இதுபோன்று ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.






