என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது
- ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
- ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 7-ந்தேதி நடைபெறும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார் ,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக ரிதன்யா தரப்பு வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் விசாரணையில் அவர்கள் அவகாசம் கேட்டுக்கொண்டதால் நீதிபதி 7-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
ஒரு அமர்வு நீதிமன்ற வழக்கில் 10 நாட்களுக்குள் யாரும் ஜாமின் கேட்டு மனு செய்ததில்லை. இவர்கள் அரசியல் மற்றும் பணபலம்மிக்கவர்களாக இருப்பதால், உடனே ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் எதிர் மனு தாக்கல் செய்து ள்ளோம். அதன் விசாரணை வருகிற 7-ந்தேதி( திங்கட்கிழமை) நடைபெறும். முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமாக கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சித்ரா தேவியை கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். வரதட்சணை கொடுமை வழக்கு மட்டுமின்றி வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு உள்ள காரணங்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசாரின் புலன் விசாரணையில் இருப்பதால் அது முடிந்த பிறகு இது குறித்து விவரமாக வெளியிட முடியும் என தெரிவித்தனர்.
இதனிடையே ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக்கை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டக்கூடாது. 3-வது குற்றவாளியான மாமியார் சித்ரா தேவியை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில், ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியை சேயூர் போலீசார் கைது செய்துள்ளனர்.