என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு... நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு
    X

    சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு... நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

    • இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டு உள்ளது.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்தது.

    அதன்படி, இன்று முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.

    இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அங்கு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    எனவே கொடைக்கானல் நுழைவுவாயில் காமக்காபட்டி போலீஸ் சோதனைச்சாவடி, பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

    இதற்கிடையே வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். இதுதவிர அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்களும், காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதி செய்யப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×