என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் பலியான பெண்ணின் உடலை வாங்க மறுத்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்ட உறவினர்கள்
- விபத்தில் பலியாகி விடுவோம் என்பதை உணர்ந்த மகேஸ்வரி தனது கையில் இருந்த சிவநித்திசை சாலையின் ஓரமாக தூக்கி வீசினார்.
- விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (40), பேரன் சிவ நித்திஷ்(3) இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு நான்கு வழிச்சாலை வழியாக சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
மொட்டமலை பகுதி அருகே வந்த போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் தாங்கள் பலியாகி விடுவோம் என்பதை உணர்ந்த மகேஸ்வரி தனது கையில் இருந்த சிவநித்திசை சாலையின் ஓரமாக தூக்கி வீசினார்.
பின்னர் லாரி மோதியதில் பெரியசாமி லேசான காயமடைந்தார். விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக டிரைவர் ஓட்டி சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி, அதுவரை மகேஸ்வரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிலர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கப்பலூர் சுங்கச்சாவடி இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






