என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரியில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
    X

    ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரியில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    • தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலநிலை முற்றிலும் மாறி காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், மிதமான மழையும் பெய்த வண்ணம் இருக்கிறது. மழையால் மாவட்டம் முழுவதுமே மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

    அதிகபட்சமாக மாவட்டத்தில் கொடநாட்டில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடியது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488700588க்கும் தகவல் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு-0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநகரை பொறுத்தவரை நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, சத்தி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடநாடு-53, பார்சன்வேலி-26, கோத்தகிரி-23, கெத்தை-22, மசினகுடி-20, ஊட்டி-18.6, நடுவட்டம்-15, போர்த்தி மந்து-10, குன்னூர்-10.

    Next Story
    ×