என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டிவனம் அருகே 87 மரக்கன்றுகளை நட்டு வைத்து பிறந்தநாளை கொண்டாடிய ராமதாஸ்
    X

    திண்டிவனம் அருகே 87 மரக்கன்றுகளை நட்டு வைத்து பிறந்தநாளை கொண்டாடிய ராமதாஸ்

    • சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    • மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சரஸ்வதி கல்லூரியில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா, புதிய கைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் 87 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவருடன் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் காந்திமதி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் புகைப்பட கலைஞரிடம் கேமராவை வாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்த மாணவ, மாணவிகளை வீடியோ எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் டாக்டர் ராமதாசுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து சூரிய மின்சக்தி கட்டுப்பாட்டு அறையை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற முக்கிய தலைவர்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் என கூறினார்.

    பின்னர் தங்களது பிறந்தநாளில் மக்களுக்கும், பா.ம.க.வினருக்கும் என்ன கூற இருக்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு, மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். ஒரு சொட்டு மழைநீரை கூட கடலில் கலக்க விடக்கூடாது என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கைப்பந்து விளையாட்டு மைதானத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து கைப்பந்தை அடித்து விளையாட்டை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×