என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்-  தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்- தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு

    • கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை.
    • சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தையும், தாயும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பு இருந்தார்.

    சிறுமியின் தந்தை பொள்ளாச்சியில் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் அருண்குமார் என்பவரிடம் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்துக்கு சிறுமியும் வேலைக்கு சென்றார். அப்போது நிறுவன உரிமையாளர் அருண்குமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் அருண்குமாரின் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது எனது மகளுக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக எனது மகள் அங்கு வேலையை விட்டு நின்று விட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார்.

    அங்கு எனது மகள் மீது திருட்டுப்புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகத்தினர் சிறுமியின் தந்தை பணியாற்றும் நிறுவன உரிமையாளரான அருண்குமாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அருண்குமார் சிறுமியை நேரில் அழைத்து விசாரித்து உள்ளார். அவரது தந்தை முன்பே சிறுமியை அருண்குமார் பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதில் எனது மகளின் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை. தற்போது மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். படுகாயம் அடைந்த எனது மகளை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன். இதற்கு காரணமான தொழில் அதிபர் அருண்குமார் மற்றும் எனது கணவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தனக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமி உறவுப்பெண்ணிடம் கூறி இருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்லுமாறு கூறிஉள்ளார். மேலும் அருண்குமார் சிறுமியை தாக்கியபோது அவர் அடிக்க கம்பை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக உறவுக்கார பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×