என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    X

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    • தமிழகத்தில் ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
    • பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, விஜய் கட்சி, சீமான் கட்சி ஆகியவை இந்த தேர்தலில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அனைத்துக் கட்சிகளும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி பிரசாரம் தொடங்கும் பணிகளை செய்து வருகின்றன. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பா.ஜ.க. கட்சி 2026-ம் ஆண்டு தேர்தலை முக்கியமானதாக கருதுகிறது. அந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதோடு தமிழகத்தில் பா.ஜ.க.-வை வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் இனி அடிக்கடி தமிழகத்துக்கு அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து தமிழகத்துக்கு வர தயாராகி வருகிறார்கள்.

    அதன் முதல் தொடக்கமாக பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் 27, 28-ந் தேதிகளில் 2 நாட்கள் தமிழ் நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பது தெரிய வந்து உள்ளது. பிரதமர் மோடி 26-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வருகிறார்.

    அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு வருவார் என்று தெரிய வந்துள்ளது. அன்று இரவு அவர் திருச்சியில் தங்குவார் என்று கூறப்படுகிறது.

    27, 28-ந்தேதிகளில் பிரதமர் மோடி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். 27-ந்தேதி அவர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சிவாலயத்துக்கு செல்ல இருக்கிறார்.

    கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி திருவாதிரை விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். வழக்கமாக 3 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி தொடங்கி 7 நாட்களுக்கு விழா நடை பெற உள்ளது. அந்த சமயத்தில் 27-ந்தேதி நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு விழாக்களில் 28-ந்தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

    அரியலூர், பெரம்பலூர், தஞ்சை 3 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி செல்லும் இடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி பிரதமர் மோடி சுற்றுப்பயண ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடத்திய முருகன் மாநாடு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

    அதுபோல பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் ஆன்மீக பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8-ந்தேதி தமிழகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தார். கடைசி நேரத்தில் அது ரத்து ஆனது.

    அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோவைக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகை உறுதி செய்யப்படவில்லை.

    Next Story
    ×