என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - மணமகனின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - மணமகனின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    • திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார்.
    • தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டினை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த்(வயது 25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் திருமணத்தினை அனிதா வீட்டில் ஏற்கவில்லை. அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனிதா பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் 2 தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பினர்.

    திருமங்கலம் நகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது மருமகன் அஷ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். இதில் கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இவர்களின் தகராறினை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வம் அவரது பேத்தியை அழைத்து கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

    இந்தநிலையில் இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அஷ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பியோடிவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அதே நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியாரின் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கபணம் 2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுத்தார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மகன் கௌசிக் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×