என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 21-ந்தேதி உருவாகிறது
- கேரளா-கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24-ந்தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே உருவாகிறது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா-கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21-ந்தேதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24-ந்தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே உருவாகிறது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






