என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசின் வீண் பிடிவாதமே வாலிபர் தற்கொலைக்கு காரணம் - நயினார் நாகேந்திரன்
- தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
- எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திருப்பரங்குன்ற தீபத் தூணில் கார்த்திகை தீப மேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தி.மு.க. அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் மதுரை மாநகர் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கிறேன்.
தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கை கோர்த்து நிற்போம். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.
எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்த கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






