என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிசாமி
- ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.
- மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவர் பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி,
12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. நுழைவு தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து,
ஐ.ஐ.டியில்-ல் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.
மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக கட்சியே ஏற்கும்.






